Thursday, September 30, 2010

முத்தம் - என் கன்னத்தில் எச்சில்த்துளி

பவளவாய் இருந்து பற்றறுத்துத் தெறித்த எச்சில்த்துளி என் கன்னத்தில் இன்னமும் ஈரமாய். பச்சையாய் இருக்கிறது என் நினைவுகளில் அந்த முத்தம். அவன் ஸ்பரிசம், குறைந்தது பார்வையாயினும் கிடைக்காதா என ஏங்கும் கோடி கோடி நெஞ்சங்களுக்கு மத்தியில், எனக்கு முத்தமே கிடைத்திருக்கும் பட்சத்தில் - வேறென்ன மொத்தமாய் அடைந்தேன் மோட்ஷம்.

ஆடை உடுத்திருந்தானா? அரைநாணாவது கட்டியிருந்தானா?


சட்டென்று வந்தான் - யாரழைத்தார்?, யார்யாரோ, எதற்கெதற்கோ, எங்கெங்கோ – நானழைத்தேனா? ஞாபகமில்லை. எங்கிருந்தோ வந்தான். அவன் வருகையை நினைக்கையிலேயே கண்கள் குளிர்கின்றன என்றால், காணும்போது எப்படி இருக்கும்.

பஜன் நடந்துகொண்டு இருக்கிறது. ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும், நடுவாக இருவர் அருகருகாய் நடக்கும் அளவிற்கு இடம் விட்டு உட்காந்திருந்தார்கள். எல்லா மதங்களையும் பாடும் அம்மன்றத்தில் அப்பொழுது ராமனைப் பாடினார்களா, இல்லை கிருஷ்ணனைப் பாடினார்களா, இல்லை அல்லாவைத்தான்; பாடினார்களா என்று ஞாபகமில்லை. பஜன் ஒரு பாடலின் உச்சத்தைத் அடைந்து கொண்டிருந்தது. இசையும் பக்தியும் கலந்துதிருந்தன.


திடீரென, சுவாமிப்படங்கள் இருக்கும் பக்கமிருந்து, மன்றத்தின் நடுவிலிருந்த இடைவெளியூடாக என்னை நோக்கி ஓடி வந்தான் - நீல வண்ண கண்ணன்.
உண்மையிலேயே உண்மையிலேயே அவன் ஓர் ஒளிவீசும் நீல நிறத்தில்தான் இருந்தான். மூன்று தொடக்கம் நான்கு வயது இருக்குமென்று நினைக்கிறேன். கையில் குழலோ குச்சியோ இருக்கவில்லை, ஆனாலும் தலையில் மயிலிறகு இருந்தது. நேராக என்னை நோக்கி என்னை நோக்கி ஓடி வந்து..

 என் வலது புறமாக வந்து
 என் தொடையில் தன் கால் ஊன்றி
 என் கழுத்தில் கைபோட்டு
 என்னை இறுக்கி அணைத்து
 என் வலது கன்னத்தில்
 இதழ் பதித்து முத்தமிட்டான்
        குழந்தைக் கண்ணன்


      . . .

கோகுலத்தில் கோபியர்கள் காத்திருக்கிறார்கள்.
பாடகர்கள் பக்தியில் மூழ்கியிருந்தார்கள்.
புல்லாங்குழலுக்கு தினந்தோறும் கிடைத்த பாக்கியம் எல்லாப் பாவங்களும் அறிந்த எனக்கும் கிடைத்தது.

சட்டென கிடைத்த முத்தம், அந்த யுத்தகளத்தில் கீதையை எப்படிச் சொன்னான் என பட்டென்று புரியவைத்தது.

No comments:

Post a Comment

இன்னும்